அகமதாபாத்
அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 3) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் பஞசாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ஆர்சிபி அணி.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் வரலாற்றில் 18 வருடங்களாக ஆர்சிபி அணிக்கு விளையாடி வரும் விராட் கோலி தற்போதுதான் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைகளில் வருடி உள்ளார். ஆட்டத்தின் கடைசி பந்து வீசப்பட்டதும் மைதானத்தில் விராட் கோலி உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் சிந்தியது ரசிகர்களின் மனதை வருடியது.
முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற விராட் கோலி கூறும்போது, “ என்ன விஷயங்கள் நடைபெற்ற போதிலும் ஆர்சிபி அணிக்கு விசுவாசத்துடன் இருந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்த அணியிலேயே விளையாடி வருகிறேன்.
பெங்களூரு அணியுடனேயே என்னுடைய மனம், ஆன்மா இருக்கும். நான் ஐபிஎல் தொடரில் விளையாடும் வரை இந்த அணியிலேயே இருப்பேன். கடைசியாக, என்னுடைய மடியில் இந்த வெற்றியை தந்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆர்சிபி அணி நிர்வாகம் நேர்மையில் சிறந்து விளங்குகிறது” என்றார்.

