ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில் பதும் நிசங்காவின் சதத்தால் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இலங்கையின் கண்டியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 54, டிராவிஸ் ஹெட் 56, இங்கிலிஸ் 27, மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் ஹேமந்தா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சமீரா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட் செய்து. தொடக்க வீரரான குஷல் பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மெண்டிஸ் 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பவன் ரத்தனநாயகே உடன் இணைந்து இலங்கை அணிக்கான வெற்றி இலக்கை அடைய செய்தார் நிசாங்கா. இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பதும் நிசாங்கா 52 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சதமாக இது அமைந்தது. 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.
இதன் மூலம் இலங்கை அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கி உள்ளது.

