இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 45, தனஞ்ஜெயா டி சில்வா 40, பவன் ரத்னாயகே 29, பதும் நிசங்கா 26 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் 8 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். இதில் ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
220 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோ ரூட் 90 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், கேப்டன் ஹாரி புரூக் 75 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், ஜாஸ் பட்லர் 21 பந்துகளில், 33 ரன்களும் சேர்த்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

