இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருந்தது. காயம் காரணமாக அக்சர் படேல் களமிறங்கவில்லை. அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டனர். நியூஸிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. டிம் ராபின்சன், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க் ஆகியோர் நீக்கப்பட்டு டிம் ஷெய்பர்ட், மேட் ஹென்றி, ஜாக் ஃபோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார். டெவன் கான்வே 19, டிம் ஷெய்பர்ட் 24, கிளென் பிலிப்ஸ் 19, டேரில் மிட்செல் 18, மார்க் சாப்மேன் 10 ரன்கள் சேர்த்தனர்.
இறுதிக்கட்ட ஓவர்களில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், ஜாக் ஃபோக்ஸ் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களும் விளாசினர்.
209 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அபிஷேக் சர்மா 0, சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஜோடி எந்தவி நெருக்கடியும் இல்லாமல் அதிரடியாக விளையாடி மிரட்டியது. இதனால் இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளடன் 76 ரன்கள் விளாசி இஷ் சோதி பந்தில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷிவம் துபே 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்தார்.
ஆட்ட நாயகனாக இஷான் கிஷன் தேர்வானார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 3-வது போட்டி நாளை குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

