ஆப்கானிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி கடைசி மற்றும் 3-வது டி 2டி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரண்டன் கிங் 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். மேத்யூ போர்டு 27, ஷமர் ஸ்பிரிங்கர் 16, ஜாண்சன் சார்லஸ் 17 ரன்கள் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஜியாவுர் ரஹ்மான், ரஷித் கான், அப்துல்லா அமஹ்மத்ஸாய் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து 151 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 58 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், இப்ராகிம் ஸத்ரன் 28 ரன்களும் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஷமர் ஸ்பிரிங்கர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
ஏனெனில் முதல் 2 ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

