sumit nagal

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இந்திய அணியில் சுமித் நாகல்

புதுடெல்லி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 1 முதல் சுற்றில் இந்திய அணி வரும் செப்டம்பர் 12-ம் தேதி சுவிட்சர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அந்நாட்டில் உள்ள பைல் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த மோதலுக்கான 8 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரு வருடங்களுக்கு பிறகு சுமித் நாகல் அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக அவர், 2023-ம் ஆண்டு செப்டம்பரில் மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி இருந்தார். அந்த மோதலில் சுமித் நாகல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தார். இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரியும் அணியில் இணைந்துள்ளார்.

தரவரிசையில் சுமித் நாகல் 306-வது இடத்தில் உள்ளார். இந்த மாதம் இத்தாலியில் நடைபெற்ற டிரிஸ்டி சாலஞ்சர் தொடரில் சுமித் நாகல் அரை இறுதி வரை முன்னேறியிருந்தார். டேவிஸ் கோப்பை தொடரில் சுமித் நாகலுடன் கரண் சிங் (403), ஆர்யன் ஷா (442) ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் விளையாட தேர்வாகி உள்ளனர். அதேவேளையில் மாற்று வீரர்களாக சசிகுமார் முகுந்த் (463), தக் ஷினேஷ்வர் சுரேஷ் (790) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேவேளையில் ஒற்றையர் பிரிவில் கடந்த காலங்களில் இடம் பெற்ற தமிகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன் நீக்கப்பட்டுள்ளார். ராம்குமார் ஒற்றையர் பிரிவில் இருந்து இரட்டையர் பிரிவுக்கு எளிதாக மாறக்கூடிய வீரர். ஆனால், சாலஞ்சர் சர்க்யூட்டில் ஒற்றையர் பிரிவுகளின் பிரதான சுற்றுக்குள் நுழையக்கூட ராமர்குமார் சிரமப்படுவதால் இம்முறை அவர், டேவிஸ் கோப்பைக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி (35), என்.ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாற்று வீரராக ரித்விக் போளிபள்ளி (77) சேர்க்கப்பட்டுள்ளார். டேவிஸ் கோப்பை தொடரில் இதற்கு முன்னர் இந்தியா, சுவிட்சர்லாந்து அணிகள் 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 2 முறை வெற்றி கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top