இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கி ரன் வேட்டையாடியது இங்கிலாந்தின் ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஜோடி.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46, சாய் சுதர்சன் 61, கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 19, ஷர்துல் தாக்குர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 20 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில், சிலிப் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த ஷர்துல் தாக்குர் 88 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை கல்லி திசையில் அடித்த போது பென் டக்கெட் அந்தரத்தில் பல்டி அடித்து செய்த கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார்.
ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் 37 ரன்கள் எடுத்திருந்த போது கிறிஸ்வோக்ஸ் பந்தில் வலது காலில் காயம் அடைந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறி இருந்த ரிஷப் பந்த் களமிறங்கினார். தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி வந்த வாஷிங்டன் சுந்தர் 90 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக் திசையில் தூக்கி அடித்த போது கிறிஸ் வோக்ஸிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து அன்ஷுல் கம்போஜ் 3 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். தனது 18-வது அரை சதத்தை கடந்த ரிஷப் பந்த் 75 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.
கடைசி வீரராக ஜஸ்பிரீத் பும்ரா 4 ரன்களில் அவுட் ஆனார். முகமது சிராஜ் 5 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். கிறிஸ் வோக்ஸ், லியாம் டாவ்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பென் டக்கெட்டும், ஸாக் கிராவ்லியும் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கி ரன்கள் சேர்த்தனர். 32 ஓவர்களில் 166 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். ஸாக் கிராவ்லி 113 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசிய நிலையில் ஜடேஜா பந்தில் சிலிப் திசையில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சதத்தை நெருங்கிய நிலையில் பென் டக்கெட் 100 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்த நிலையில் அறிமுக வீரரான அன்ஷுல் கம்போஜ் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. ஆலி போப் 20, ஜோ ரூட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 133 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது இங்கிலாந்து அணி.

