சண்டைக்கு சண்டைதான்.. பின் வாங்க மாட்டாம்.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி இன்று (23-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தத் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் போது இரு அணி வீரர்களும் களத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஸாக் கிராவ்லி களத்தில் நேரத்தை வீணாக்கும் செயலில் ஈடுபட்டார். இதனால் அவருடன் கேப்டன் ஷுப்மன் கில் வாக்குவாதம் செய்தார். பென் டக்கெட், ஹாரி புரூக் ஆகியோரும் இந்திய வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் மான்செஸ்டர் போட்டியிலும் களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறும் போது, “களத்தில் நாங்கள் தொடங்க வேண்டிய விஷயங்களில் ஸ்லெட்ஜிங் கும் ஒன்று என்று நான் நினைக்கவில்லை. எந்தவொரு அணியும் இதை செய்யும் என கருதவில்லை. டெஸ்ட் தொடரில் எப்போதும் ஒரு சூடான தருணம் நிகழும். இது பெரிய தொடர், செயல் திறனை வெளிப்படுத்துவதில் இரு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கிறது.

நாங்கள் வேண்டுமென்றே களத்தில் வாக்குவாதம் செய்வதை ஆரம்பிப்பது இல்லை. ஏனெனில் இது களத்தில் எங்களது கவனத்தை திசை திருப்பிவிடும். ஆனால் எந்த ஒரு வகையிலும் நாங்கள் நிச்சயமாக ஒரு படி பின்வாங்க மாட்டோம். எந்தவொரு எதிர்ப்பையும் எங்களை எதிர்கொள்ள அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top