CGC

ஆகஸ்ட் 6-ல் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

அர்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, விதித் குஜ்ராத்தி
உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறுகிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 தொடரில் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமான FIDE சர்க்யூட் புள்ளிகளை பெற முடியும். இதனால் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

MGD1 நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, குவாண்ட்பாக்ஸ் நிதியுதவியுடன் நடத்தப்படும் இந்தப் போட்டியானது மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் உலகளாவிய நட்சத்திரங்கள் மற்றும் ஒலிம்பியாட் சாம்பியன்கள் உள்ளனர். நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அமெரிக்காவின் லியாங் அவோன்டர், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன், ரஷ்யவின் விளாடிமிர் ஃபெடோசீவ் மற்றும் 2024-ல் சேலஞ்சர்ஸ் பிரிவில் வென்றதன் மூலம் முன்னேறியுள்ள இந்தியாவின் வி.பிரணவ் ஆகியோர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்களை BookMyShow (https://in.bookmyshow.com/sports/quantbox-chennai-grand-masters-2025/ET00453680) இணையதளம் வாயிலாக பெறலாம். டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும். விஐபி டிக்கெட் விலை ரூ.3,500 ஆகும். முழுநாள் போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

MGD1 நிறுவனத்தின் துணைத் தலைவரான இந்திய கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன் கூறும்போது, “குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் உலகின் மிக முக்கியமான கிளாசிக்கல் போட்டிகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது,

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேலஞ்சர்ஸ் பிரிவு இந்தியாவின் வளர்ந்து வரும் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் களமாக மீண்டும் வருகிறது. இந்த பிரிவில் இம்முறை கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்சா, ஆர்.வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி, அபிமன்யு புராணிக், ஆர்யன் சோப்ரா, அதிபன் பாஸ்கரன், பி.இனியன், தீப்தயன் கோஷ் மற்றும் எம்.பிரனேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருகு ரூ.25 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு முறையே ரூ.15 லட்சமும், ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சேலஞ்சர்ஸ் வெற்றியாளருக்கு ரூ.7 லட்சமும், 2026-ம் ஆண்டு மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடுவதற்கான இடத்தையும் பெறுவார். மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவர் 24.5 FIDE சர்க்யூட் புள்ளிகளை பெறுவார்.

இந்த புள்ளிகள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானதாகும். கூட்டு வெற்றியாளர்களாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா 22.3 புள்ளிகள் கிடைக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு முறையே 17.8 மற்றும் 15.6 புள்ளிகள் கிடைக்கும்.

இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி கூறும்போது, “சொந்த நாட்டில் அதிக மதிப்பு கொண்ட போட்டியை விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. டாப்பில் இருக்கும் வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை நான் அறிவேன், ஆனால் இந்த ஆண்டுக்கான தொடர் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு ஆட்டமும் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தக் கோரும். குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போன்ற நிகழ்வுகள் உலகளாவிய இலக்குகளைத் துரத்தும் வீரர்களுக்கு மட்டுமல்ல, வலுவான சதுரங்க கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும், அடுத்த தலைமுறை இந்திய திறமைகளை ஊக்குவிப்பதற்கும் இன்றியமையாதவை” என்றார்.

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025-ம் ஆண்டு பதிப்பு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய இருவருக்கும் உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதை உறுதியளிக்கிறது. பிரபலமான செஸ் யூடியூப் சேனல்களிலும் போட்டிகள் நேரடி ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இது இந்தியாவின் செஸ் தலைநகராக சென்னையின் நற்பெயரை வலுப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top