பவுமாவை மக்கள் மறக்கமாட்டார்கள்.. எய்டன் மார்க்ரம்

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 283 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டத்தில் 83.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. மார்க்ரம் 207 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் விளாசினார். தெம்பா பவுமா 134 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார்.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வானார். ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி 27 வருடங்களுக்கு பிறகு தற்போது தெம்பா பவுமா தலைமையில் பட்டம் வென்றுள்ளது.

ஆட்ட நாயகன் விருது வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் கூறும்போது, “முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன பிறகு விஷயங்கள் எப்படி நடந்தன என்பது விசித்திரமாக இருக்கிறது. கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை, களத்தில் சிறிது நேரம் செலவிட்டு ரன்கள் எடுத்தேன், எல்லாம் சரியாக அமைந்ததில் மகிழ்ச்சி. லார்ட்ஸ் மைதானம் ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் விளையாட விரும்பும் இடம். ஏராளமான தென்னாப்பிரிக்க ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

இது சிறப்பான நாட்களில் ஒன்றாகும். ஆட்டம் ஒருதலைபட்சமாக அமையவில்லை. அழுத்தத்தை உள்வாங்கி கொண்டு ரன்கள் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிவதில்தான் அனைத்தும் உள்ளது. தெம்பா பவுமா கேப்டனாக எப்போதும் முன்னணியில் இருந்து வழிநடத்தியுள்ளார், ரன்கள் எடுக்க அவர், வழியைக் கண்டுபிடித்தார். இந்த வகையான இன்னிங்ஸை மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top