அகமதாபாத்
இந்தியன் ஆயில் யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA Arena அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணி, நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸுடன் மோதியது. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்திருந்தது.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயுடன் மோதினார். இதில் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாய் 3-0 (11-7, 11-7, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் இளம் இந்திய நட்சத்திரமான பொய்மண்டி பைஸ்யா, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியானுடன் (சிங்கப்பூர்) பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஜெங் ஜியான் 3-0 (11-6, 11-8, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
கடைசி செட்டில் பொய்மண்டி பைஸ்யா சவால் கொடுத்தார். இதனால் இந்த செட் 10-10 என கோல்டன் பாயிண்டுக்கு சென்றது. எனினும் தனது அனுபவத்தால் ஜெங் ஜியான் 11-10 என வெற்றியை வசப்படுத்தினார். ஜெங் ஜியானுக்கு நடப்பு சீசனில் தொடர்ச்சியான 6-வது வெற்றியாக அமைந்தது. அவர், ஒரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்கவில்லை.
இந்த வெற்றியின் மூலம் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணிக்கு எதிரான டையில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 6-0 என முன்னிலை பெற்றது. 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பொய்மண்டி பைஸ்யா, கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), ஜோடியானது டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியான் (சிங்கப்பூர்), ஹர்மீத் தேசாய் ஜோடியுடன் மோதியது. இதில் ஜெங் ஜியான், ஹர்மீத் தேசாய் ஜோடி 2-1 (11-2, 10-11, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டையை டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-1 என தன்வசப்படுத்தியது.
4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பயாஸ் ஜெயின், டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் விட்டர் இஷியுடன் (பிரேசில்) மோதினார். இதில் விட்டர் இஷி 2-1 (7-11, 11-9, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகி (சீனா), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான கிருத்விகா சின்ஹா ராயுடன் மோதினார். இதில் கிருத்திகா,
உலகத் தரவரிசையில் 35-வது உள்ள சீனாவின் ஃபேன் சிகியை 2-1 (8-11, 11-9, 11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினார். முடிவில் இந்த டையில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் 12-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் 5 டைகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 25 ஆட்டங்களில் விளையாடி 16-ல் வெற்றி பெற்று 44 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் லீக் சுற்று நடைபெறுகிறது. இதில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் அரை வாய்ப்பு தெரிய வரும். அதே வேளையில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணி 29 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் நாளை (ஜூன் 10) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் – கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (TTFI) ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6, ஒரு முதன்மையான தொழில்முறை லீக்காக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 16 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் இடம் பெறும் 23 மோதல்களும் அகமதாபாத்தின் EKA Arena அரங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் BookMyShow-ல் கிடைக்கும்.