கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன்

ஸ்டாவஞ்சர்

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்றது. 6 வீரர்கள் கலந்து கொண்டு இந்த தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டது. இதன் கடைசி சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.

தொடக்கத்தில் குகேஷ் பின்தங்கிய நிலையில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர், மீண்டு வர முயற்சித்த போது கண்மூடித்தமாக செய்த தவறால் தனது வாய்ப்பை நழுவவிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் அவர், வெற்றி பெற்றிருந்தால் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருப்பார்.

ஏனெனில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் தனது கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 56-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்திருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அர்மகேதான் டைபிரேக்கரில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதனால் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

9-வது சுற்று வரை கார்ல்சன் 15 புள்ளிகளையே பெற்றிருந்தார். குகேஷ் 14.5 புள்ளிகளை பெற்றிருந்தார். குகேஷ் தனது கடைசி சுற்றில் வெற்றி பெற்றிருந்தால் முழுமையாக 3 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருப்பார். ஆனால் அது நிகழவில்லை.

கார்ல்சன், நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது இது 7-வது முறையாகும். பேபியானோ கருனா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தார். அர்ஜூன் எரிகைசி 13புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top