RCB cup

‘ஈ சாலா கப் நம்து‘.. ரஜத் பட்டிதார் உற்சாகம் !

அகமதாபாத்

அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 3) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் பஞசாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ஆர்சிபி அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

போட்டி முடிவடைந்ததும் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறும்போது, “ அணிக்காக நீண்ட காலம் விளையாடி வரும் விராட் கோலிக்கும், இந்த அணியை நீண்ட காலம் ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் இந்த சாம்பியன் பட்டம் மிகவும் சிறப்பானது. இதற்கு இவர்கள் தகுதியானவர்கள்.

முதல் தகுதி சுற்றில் நாங்கள் வெற்றி பெற்றதுமே கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்பினேன். இந்த மைதானத்தில் 190 ரன்கள் நல்ல ரன்கள்தான். ஏனென்றால் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது.

எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டங்களை செயல்படுத்திய விதத்தை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் கிருணல் பாண்டியாவை பந்து வீச அழைப்பேன்.

மேலும், அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். குறிப்பாக ரொமாரியோ ஷெப்பர்ட் தனது ஓவர்களில் திருப்பு முனைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த தொடரில் விராட் கோலியை கேப்டனாக வழி நடத்துவதற்கு எனக்கு அருமையான வாய்ப்பு அமைந்தது. எனக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது. முன்பே சொன்னது போல அவர் எல்லாவற்றுக்கும் தகுதியானவர்.

விராட் கோலி மற்றும் ரசிகர்கள், மேலும் அணி ஊழியர்கள், அணி நிர்வாகம் என அனைவரும் ஆதரித்த விதம் அழகாக இருந்தது. ரசிகர்களுக்கு ஒரு வரி சொல்கிறேன் ‘ஈ சாலா கப் நம்து’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top