Sreeja Akula

யுடிடி சீசன் 6: சென்னை லயன்ஸ் மீண்டும் தோல்வி

அகமதாபாத்

இந்தியன் ஆயில் யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்)சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். முதல் செட்டில் தொடக்கம் முதலே கனக் ஜா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் அவர் 9-6 என முன்னிலை வகித்தார்.

எனினும் கிரில் ஜெராசிமென்கோ போராடி 10-10 என சமநிலைக்கு கொண்டு வந்தார். கோல்டன் புள்ளியாக அமைந்த இந்த செட்டை இறுதியில் கனக் ஜா 11-10 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களும் நெருக்கமாகவே சென்றது. இந்த செட்களையும் கனக் ஜா 11-10 என தன்வசப்படுத்தினார். முடிவில் அவர் 3:0 (11-10,11-10, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனால் இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 3-0 என முன்னிலை வகித்தது. 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பொய்மண்டி பைஸ்யா, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்ரீஜா அகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அனுபவம் வாய்ந்த ஸ்ரீஜா அகுலா 3:0 (11-6, 11-6, 11-9) என வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி தனது முன்னிலையை 6-0 என அதிகரித்துக் கொண்டது.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகி (சீனா), பயாஸ் ஜெயின் ஜோடி ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடி 11-4 என கைப்பற்றியது.

2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடி 11-7 என தன்வசப்படுத்தியது. கடைசி செட்டை ஃபேன் சிகி, பயாஸ் ஜெயின் ஜோடி 11-8 என கைப்பற்றியது. முடிவில் ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடி 2:1 (11-4, 11-7, 8-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணிக்கு எதிரான மோதலை 8-1 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பயாஸ் ஜெயின், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் இளம் வீரரான யஷான்ஷ் மாலிக்குடன் மோதினார். இதில் பயாஸ் ஜெயின் 3:0 (11-10, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

IndianOil UTT S6 Kanak Jha Sreeja Akula of Jaipur Patriots in action
யுடிடி சீசன் 6-ல் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் ஜோடிக்கு எதிராக விளையாடிய ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா, ஸ்ரீஜா அகுலா ஜோடி.

கடைசி மற்றும் 5-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகி, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் (நெதர்லாந்து) பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஃபேன் சிகி 2:1 (11-8, 11-6, 7-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 5 ஆட்டங்களின் முடிவில் இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை லயன்ஸ் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தது.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் இன்று (ஜூன் 4) 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி டி.டி.சி. – டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் – கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானல்களில் நேரலையாக காணலாம். மேலும் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

ட்ரீம் யுடிடி ஜூனியர்ஸ்

முன்னதாக, இந்தியன் ஆயில் மற்றும் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் ட்ரீம் யுடிடி ஜூனியர்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணி 7-2 என்ற கணக்கில் தபாங் டெல்லி டிடிசி அணியை தோற்கடித்தது. கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணியில் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் ரித்விக் குப்பதா சிறப்பாக செயல்பட்டார்.

மற்றொரு ஆட்டத்தில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி, பிபிஜி புனே ஜாக்குவார்ஸ் அணியுடன் மோதியது. இதில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றியில் சாஹில் ராவத் முக்கிய பங்குவகித்தார். அmவர், ஒற்றையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top