2-வது டி 20 கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் வெற்றி

லாகூர்

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி டி 20 தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

லாகூர் கடாபி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஷாகிப்ஸதா ஃபர்ஹான் 41 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார்.

ஹசன் நவாஷ் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மக்மூத், தன்ஸிம் ஹசன் சாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

202 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 19 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தன்ஸிம் ஹசன் சாகிப் 50, தன்ஸித் ஹசன் 33, மெஹிதி ஹசன் மிராஸ் 23 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி போட்டி நாளை (ஜூன் 1) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top