கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு இங்கிலாந்து தொடர் கடினம் !

மும்பை

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு நேற்று அறிவித்தது. இதில் 25 வயதான ஷுப்மன் கில் கேப்டனாக நியமியக்கப்பட்டுள்ளார்.

அணி தேர்வுக்கு பின்னர் அஜித் அகர்கர் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடினமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அனுபவங்களே இந்திய அணியை முன்னோக்கி நகரச் செய்யும். தற்போது, ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு கண்டிப்பாக கடினமாக இருக்கப் போகிறது.

சர்வதேசப் போட்டிகளில் அதிக சவால்கள் நிறைந்திருக்கும். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை சந்தித்து வருகிறது. சீனியர் வீரர்களில் இருவர் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். அதனால், கேப்டன் பொறுப்பு மிகவும் சவாலானதாக இருக்கப் போகிறது. ஷுப்மன் கில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவர் மிகச் சிறந்த வீரர். எங்கள் அனைவருக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. கேப்டனை ஓரிரு மணி நேரங்களில் அவர்களது செயல்பாட்டினை வைத்து தேர்வு செய்துவிட முடியாது. கேப்டனாக நியமிக்கப்பட உள்ளவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனித்தே அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படுகிறது.

ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை சரியான முடிவாக கருதுகிறோம். கடந்த ஆண்டில் அவரது விளையாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் நாங்கள் கவனித்தோம். அவரிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

இவ்வாறு அகர்கர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top