கொல்கத்தாவில் ஸ்ரேயஸ் ஐயர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 26) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது.

பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் திடீரென பார்மை இழந்துள்ளது அணியின் செயல் திறனை பாதித்துள்ளது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் ஸ்ரேயஸ் ஐயர் முறையே 6, 7, 0 ரன்களில் நடையை கட்டியிருந்தார்.

இன்றைய ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுவதால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

தற்போது அந்த அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மைதானத்தில் எதிரணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்க உள்ளார். இதனால் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். நடப்பு சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் 3 அரை சதங்களுடன் 263 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸுடன் கொல்கத்தா அணி 2-வது முறையாக மோதுகிறது. கடந்த 15-ம் தேதி முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top