சைல்ஹெட்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போடயில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 80.2 ஓவர்களில் 273 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சீயன் வில்லியம்ஸ் 59, பிரையன் பென்னெட் 57 ரன்கள் சேர்த்தனர்.
82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 79.2 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹாசைன் ஷான்டோ 60, ஜாகர் அலி 58 ரன்கள் சேர்த்தனர். 174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி இன்றைய (ஏப்ரல் 23) 4வது நாள் ஆட்டத்தில் 50.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பிரையன் பென்னட் 54, பென் கரண் 44 ரன்கள் சேர்த்தனர். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

