ஐபிஎல் டி 20 கிரிக்கெட்டில் தோனிக்கான மவுசு என்றுமே குறையாது. நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 23ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் போது அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங்க் செய்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார் தோனி. அவரது43 வயதிலும் ஸ்டெம்புகளுக்கு பின்னால் இன்னும் அவர், காட்டும் உத்வகேம், வேகத்தை ஹைடன் உள்ளிட்ட முன்னாள் வீரர்க்ள் வெகுவாக பாராட்டினார்கள்.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 28) சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட் செய்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேனான பில் சால்ட் அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்தார். அவர், 16 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய நிலையில் நூர் அகமது வீசிய சுழலில் தோனியின் அதி மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் 5வது ஓவரில் தோனி செய்த இந்த ஸ்டெம்பிங்கை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ரசிகர்கள் வாயைபிளந்தபடி பார்த்து வியந்தனர். பில்சால்ட் பந்தை கவர் திசையில் விளாச முயன்றார். ஆனால் பந்து மட்டையில் படாமல் தோனியின் கைகளுக்கு செல்ல அவர், கச்சிதமாக கதையை முடித்தார். சால்ட்டின் கால் ஒரு இன்ச் காற்றில் இருக்க தோனி மேஜிக் செய்து வெளியேற்றி விட்டார்.

