சுதர்சன், பிரசித் அட்டகாசம்
அகமதாபாத்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 58 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை ருசித்த குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் கில் களமிறங்கினர். கில் 2 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் கிளீன் போல்டாக, டைட்டன்ஸுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

எனினும், சுதர்சன் – பட்லர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். பட்லர் 36 ரன் (25 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்ப, சுதர்சன் – ஷாருக் கான் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 34 பந்தில் 62 ரன் சேர்த்தது.
ஷாருக் கான் 36 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தீக்ஷனா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சாம்சனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஷெர்பேன் ரூதர்போர்டு 7 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய சாய் சுதர்சன் 82 ரன் (53 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அவுட்டானார்.
ரஷித் கான் 12 ரன் எடுத்து தேஷ்பாண்டே வேகத்தில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. ராகுல் திவாதியா 24 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அர்ஷத் கான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் தீக்ஷனா, தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்,, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 159 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரியான் பராக் 26 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிம்ரோன் ஹெட்மயர் 52 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச… மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.
சந்தீப் ஷர்மா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் (4-0-24-3), ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2, முகமது சிராஜ், அர்ஷத் கான், கெஜ்ரோலியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 58 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அதிரடியாக 82 ரன் விளாசிய சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.