ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக குல்பாதின் நயீப் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார். இப்ராகிம் ஸத்ரன் 10, ரஹ்மனுல்லா குர்பாஸ் 27, செடிக்குல்லா அடல் 29 , டார்விஷ் ரசூலி 20, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 14, முகமது நபி 10 ரன்கள் சேர்த்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். மெட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி பேட் செய்தது. முஜீப் உர் ரஹ்மான் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் ஃபின் ஆலன் (1), ரச்சின் ரவீந்திரா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
14 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், டிம் ஷெய்பர்ட்டுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சை பதம் பார்த்தார். அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசிய நிலையில் ரஷித் கான் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது.
தனது 14-வது அரை சதத்தை கடந்த டிம் ஷெய்பர்ட் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் முகமது நபி பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மார்க் சாப்மேன் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் ஆட்டமிழந்தார்.
16 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் மிட்செல் சாண்ட்னர் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களும் டேரில் மிட்செல் 14 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களும் விளாச நியூஸிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் 170 ரன்களுக்கு மேலான இலக்கை வெற்றிகரமாக இதற்கு முன்னர் துரத்தியது இல்லை. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 167 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி கண்டிருந்தது அதிகபட்சமாகும். தற்போது முதன் முறையாக 183 ரன்கள் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.

