Yashaswini Ghorpade

ஃபேன் சிகியை வீழ்த்தினார் யஷஸ்வினி

அகமதாபாத்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்(யுடிடி) 6-வது சீசன் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் சென்னை லயன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள உலகத் தரவரிசையில் 35-வது உள்ள சீனாவின் ஃபேன் சிகி, யு மும்பா அணியில் உள்ள உலகத் தரவரிசையில் 81-வது இடத்தில் உள்ள யஷஸ்வினி கோர்படேவுடன் மோதினார்.

இதில் 20 வயதான யஷஸ்வினி கோர்படே 2-1 என்ற கணக்கில் ஃபேன் சிகியை தோற்கடித்து அசத்தினார். WTT தொடரில் 2 முறை பட்டம் வென்றுள்ள ஃபேன் சிகி, உலகத் தரவரிசையில் அதிகபட்சமாக 11-வது இடம் வரை பிடித்துள்ளார். யஷஸ்வினி கோர்படே முதல் செட்டை 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

தொடர்ந்து 2-வது செட்டை ஃபேன் சிகி 11-6 தன்வசப்படுத்தினார். தொடர்ந்து வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் 2-7 என பின்தங்கியிருந்த யஷஸ்வினி கோர்படே கடுமையாக போராடி 11-10 என வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு சீசனில் ஃபேன் சிகியை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை யஷஸ்வினி கோர்படே பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top