அகமதாபாத்
இந்தியன் ஆயில் யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA Arena அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் – அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணிகள் மோதின.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா (அமெரிக்கா), அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் இளம் இந்திய நட்சத்திரமான திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவாவுடன் மோதினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா 3–1 (11–10, 11–8, 11–6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் (நெதர்லாந்து), அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் ஜியோர்ஜியா பிக்கோலினுடன் (இத்தாலி) மோதினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் 3–0 (11–7, 11–5, 11–10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த டையில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 6–0 என முன்னிலை பெற்றது.
3–வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடியானது அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் அய்ஹிகா முகர்ஜி, ரிக்கார்டோ வால்தர் (ஜெர்மனி) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் அய்ஹிகா முகர்ஜி, ரிக்கார்டோ வால்தர் ஜோடி 2–1 (11–8, 9–11, 11–7) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
4–வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஜீத் சந்திரா, அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் ரிக்கார்டோ வால்தருடன் மோதினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திரா 2-1 (11-10, 9-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணிக்கு எதிரான டையை 9-3 என தன்வசப்படுத்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி.
5–வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலா, அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் அய்ஹிகா முகர்ஜியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இரு இந்திய நட்சத்திரங்கள் மோதிய இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலா 2-1 (8-11, 11-7, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
முடிவில் இந்த டையில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 5 டைகளில் விளையாடி உள்ள ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 41 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் 5 டைகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 27 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
யுடிடி சீசன் 6-ல் நாளை (ஜூன் 8) மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி டி.டி.சி. – பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.