dhoni

சிஎஸ்கே ஸ்டைல் இதுதான்… மாற்ற முடியாது !

சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 9 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது. மேலும் நடப்பு சீசனில் சிஸ்கேவுக்கு இது 5-வது தொடர்ச்சியான தோல்வியாகவும், சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் தோல்வியாகவும் அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டது இதுவே முதன்முறை.

நடப்பு சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கேவுக்கு இன்னும் 8 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 6 முதல் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றாமல் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸ்ஸி கூறியதாவது:

எங்களிடம் சரியான வீரர்கள் உள்ளனர் என்று நான் இன்னும் நினைக்கிறேன். நாங்கள் அவர்களிடம் நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். அதிலிருந்து நாங்கள் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றை வளர்க்கவும், கட்டமைக்கவும் முடியும் என்று நம்புகிறோம்.

நாங்கள் விளையாடும் ஸ்டைல் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஆனால் எங்களிடம் உள்ள வீரர்களிடம் அவர்களை முற்றிலும் மாறுபட்ட வழியில் விளையாடுமாறு கேட்க விரும்பவில்லை. அவர்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடுகிறார்கள். ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் அவர்கள் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே தற்போது இங்கு வந்துள்ளனர். நான் நிச்சயமாக அவர்களை வேறு வழியில் விளையாட வைக்க முயற்சி செய்பவன் அல்ல.

சிஎஸ்கே அணியில் உள்ள பல வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்டத்தை கடந்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் இதற்கு அப்பாற்பட்டவர்கள். தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்திம காலத்தில் இருந்த வீரர்கள் சிஎஸ்கேவுக்கு வந்து கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எங்களிடம் உள்ள வீரர்கள் இன்னும் சில நல்ல கிரிக்கெட்டை அவர்களுக்கு முன்னால் வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களால் நிறைய வழங்க முடியும் என்றே நினைக்கிறேன்.

பிளே ஆஃப் சுற்றுக்கு நாங்கள் முன்னேற வேண்டுமானால் வெற்றி பெறுவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். ஐபிஎல் போன்ற நீண்ட தொடரில் உத்வேகம் மிகவும் முக்கியமானது. நிச்சயமாக அந்த உத்வேகம் எங்களிடம் தற்போது இல்லை. இந்நிலையை மாற்றி, நம்பிக்கையை பெற்று சில வெற்றிகளை குவித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது நிகழும் பட்சத்தில் பிளே ஆஃப் நெருங்கும் போது கடைசி அணியாக எங்களால் நுழைய முடியும்.

இவ்வாறு மைக்கேல் ஹஸ்ஸி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top