ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 6 அணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா – அமெரிக்கா அணிகள் இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக வான்கடே மைதானத்தில் கண்கவர் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கும் விழழவில் இசை மற்றும் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்தார் கலைஞர் ரிஷப் ஷர்மா, டிரம்ஸ் கலைஞர் சிவமணி ஆகியோரின் பிரம்மாண்டமான இசைக்கலவையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜெட்பேக் கலைஞர் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையைச் அந்தரத்தில் பறந்தபடி மைதானத்துக்குள் கொண்டு வருவார்.
அப்போது ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பட்டம் வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் டிராபியை வரவேற்று தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 குழந்தைகளுடன் இணைந்து, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 போட்டியை முறைப்படி தொடங்கி வைப்பார்கள்.
இதன் பின்னர் பிரபல பாடகரான பாட்ஷாவின் இசை நிகழ்ச்சியும் நோரா ஃபதேஹியின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சிகிள் டி 20 கிரிக்கெட்டின் வேகம் மற்றும் ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இசை மற்றும் நடன நிகழ்ச்சியின் முடிவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

