ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
குயிண்டன் டி காக் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும் விளாசினர்.
டெவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில், 23 ரன்களும், டேவிட் மில்லர் 15 பந்துகளில், 20 ரன்களும், மார்கோ யான்சன் 7 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 3, ரஷித் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 42 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசிய நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த சூழ்நிலையில் 18-வது ஓவரை வீசிய லுங்கி நிகிடி 6 ரன்களை மட்டுமே வழங்கி அஸ்மதுல்லா ஓமர்ஸாயை (22) அவுட்டாக்கி திருப்புமுனையை ஏற்படுத்தினார். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க ரபாடா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 2 நோபால்களை ரபாடா வீச ஆப்பாகின்ஸதானுக்கு படுசாதமாக அமைந்தது. .
ஒருவழியாக ஆப்கானிஸ்தான் போராட 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-வது பந்தில் நூர் அகமது 2 ரன்கள் ஓட முயன்றார். அப்போது மறுமுனையில் இருந்த ஃபசல்ஹக் ஃபரூக்கி (0) நூலிழையில் ரன் அவுட் ஆனார். இதனால் 19.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் போட்டி ‘டை’ ஆனது. நூர் அகமது 15 ரன்கள் சேர்த்திருந்தார்.
வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் நிகிடி வீசிய ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்கள் சேர்த்தது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. கடைசி பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாச தென் ஆப்பிரிக்க அணி 17 ரன்களுடன் சூப்பர் ஓவரை முடிக்க ஆட்டம் மீண்டும் டை ஆனது.
இதையடுத்து 2-வது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் வீசிய ஓவரில் தென் ஆப்பிரிக்கா 23 ரன்களை குவித்தது. ஸ்டப்ஸ் ஒரு சிக்ஸர் உட்பட 7 ரன்கள் சேர்க்க டேவிட் மில்லர் 2 சிக்ஸர்கள் உட்பட 16 ரன்கள் விளாசினார். 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் பேட் செய்தது.
கேசவ் மகராஜ் வீசிய முதல் பந்தை வீணடித்த முகமது நபி அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி பந்தில் 6 ரன் தேவையாக இருந்த நிலையில் கேசவ் மகாராஜ் வைடாக வீசினார்.
இதனால் 5 ரன் தேவை என்ற சூழ்நிலையும் பவுண்டரி அடித்தால் போட்டி மீண்டும் டை ஆகும் நிலையும் உருவானது. ஆனால் குர்பாஸ் அடித்த பந்து பாயின்ட் திசையில் டேவிட் மில்லரிடம் கேட்ச் ஆனது. முடிவில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

