ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 2 முறை சாம்பியனான இங்கிலாந்து, கத்துக்குட்டியான நேபாளத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்ளும் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்றிய வில் ஜேக்ஸ் 18 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசினார்.
185 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 56 ரன்கள் தேவையாக இருந்தது. ஆசிஃப் ஷேக் 7, குஷால் புர்தேல் 29, தீபேந்திர சிங் ஐரி 44, ரோஹித் பவுடெல் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் லோகேஷ் பாம் 2 பவுண்டரிகளை விளாசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கக்கப்பட்டது.
ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஆரிஃப் ஷெய்க் அடுத்த பந்தில் விக்கெட் கீப்பர் ஜாஸ்பட்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 8 பந்துகளை சந்தித்த ஆரிஃப் ஷெய்க் 10 ரன்கள் சேர்த்தார். இதே ஓவரில் லோகேஷ் பாம் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால் இந்த ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டது.
கடைசி 2 ஓவர்களில் நேபாளம் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவையாக இருந்தது. லூக் வுட் வீசிய 19-வது ஓவரில் முதல் 2 பந்துகளை லோகேஷ் பாம் பவுண்டரிக்கு விரட்டினார். முதல் 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் குல்ஷன் ஜா (1) போல்டானார். இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. சேம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் அடுத்த 2 பந்துகளில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதனால் 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை உருவானது. 4 பந்தில் லோகேஷ் பாம் 2 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தில் ரன் ஏதும் சேர்க்கப்படவில்லை. கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேம் கரண் தாழ்வாக வீசிய புல்டாஸை லோகேஷ் பாம் டீப் கவர் திசையில் அடிக்க ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
20 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. லோகேஷ் பாம் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், கரண் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் லியாம் டாவ்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். லூக் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜேக்ஸ், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாக வில் ஜேக்ஸ் தேர்வானார். பேட்டிங்கில் 18 பந்துகளில் 39 ரன்கள் விளாசிய அவர், பந்துவீச்சில் 2 ஓவர்களை வீசி 17 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

