இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக நீரஜ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டார்.
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் (2023, புடாபெஸ்ட்) தங்கம் கைப்பற்றினார்.
இதன் பின்னர் 2024-ம் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு புனேயில் உள்ள இந்திய ராணுவத்தின் ‘மிஷன் ஒலிம்பிக்’ பிரிவு சார்பில் நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதன் பின்னர் அவர், இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2018-ம் ஆண்டு ‘சுபேதாராக’ பதவி உயர்வு பெற்ற நீரஜ் சோப்ரா, அதன் பின்னர் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.
தற்போது நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தின் கவுரவ ‘லெப்டினன்ட் கர்னல்’ பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழில் வெளியிடப்பட்டது. இது கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

