csk mi

ஐபிஎல் 2025: 11 வருட சோகத்துக்கு முடிவு கட்டுமா மும்பை இந்தியன்ஸ்?

சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஞாயிற்றுக்கிமை இரவு (மார்ச் 23) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி வழக்கம் போன்று சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் இம்முறை நூர் அகமது, ஸ்ரேயாஷ் கோபால், தீபக் ஹூடாவும் சேர்ந்துள்ளனர்.

ஆனால் சமீபகாலமாக இங்கு நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பந்துகளில் நன்கு பவுன்ஸும், வேகமும் இருந்தது. ஆனால் இது ஐபிஎல் தொடர் என்பதால் சிஎஸ்கேவுக்கு சாதகமாக சுழலுக்கு தகுந்தபடி மாற்றப்பட்டிருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

Dhoni 1

சிஎஸ்கே பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா பலம் சேர்க்கக்கூடும்.

இதில் கான்வே, ரவீந்திரா ஆகிய இருவருமே பிளேயிங் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

ரவீந்திரா, சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபியில் 2 சதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.

ஆனால் சிஎஸ்கே எப்போதும் அனுபவம் பக்கமே சாய்யும். இதனால் அவர்கள் சாய்ஸ் கான்வேவாக இருக்கலாம். மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். பின்வரிசையில் ரவீந்திர ஜடேஜா, தோனி தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடும்.

வேகப்பந்து வீச்சில் மதீஷா பதிரனா எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். அவருடன் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, சேம் கரண், அன்சுல் கம்போஜ் பலம் சேர்க்கக்கூடும்.

மும்பை இந்தியன்ஸ் அணி தற்காலிக சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. ஏனெனில் தடை காரணமாக ஹர்திக் பாண்டியா விளையாடத முடியாத நிலை உள்ளது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் வெளிநாட்டு வீரர்களான வில் ஜேக்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், ரியான் ரிக்கெல்டன் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். இதில் ரியான் ரிக்கெல்டன் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும்.

வேகப்பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், ரீஸ் டாப்லே, கார்பின் போஸ் பலம் சேர்க்கக்கூடும். சுழலில் மிட்செல் சாண்ட்னர், கரண் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் கூட்டணி உறுதுணையாக இருக்கக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க மும்பை அணி கடந்த 2012-ம் முதல் ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது இல்லை.

இதற்கு இம்முறை சேப்பாக்கத்தில் அந்த அணி தீர்வு காணக்கூடும். ஏனெனில் இந்த மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக 8 ஆட்டங்களில் விளையாடி 5 ஆட்டங்களில் மும்பை வெற்றி கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top