அகமதாபாத்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்திருந்தது.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அனிர்பர்கோஷ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திராவுடன் மோதினார். இதில் இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திரா 2-1 (11-8, 11-9, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ரீத் ரிஷ்யா, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் (நெதர்லாந்து) பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் 2-1 (11-9, 11-6, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் ரீத் ரிஸ்யா, அல்வாரோ ரோபிள்ஸ் (ஸ்பெயின்) ஜோடியானது, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடியுடன் மோதியது. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடி 2-1 (9-11, 11-6, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிக்கு எதிரான டையில் 6-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அல்வாரோ ரோபிள்ஸ் (ஸ்பெயின்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் யஷான்ஷ் மாலிக்குடன் மோதினார். இதில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அல்வாரோ ரோபிள்ஸ் 2-1 (11-4, 6-11, 11-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணி 5-7 என நெருங்கி வந்தது.
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே
ஜாகுவார்ஸ் அணியின் ஸியோன் லீ (தென் கொரியா), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஸ்ரீஜா அகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டை ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலா 11-5 என கைப்பற்றினார். இதன் மூலம் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிக்கு எதிரான டையை 8-5 தன்வசப்படுத்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி. 2-வது செட்டை ஸியோன் லீ 11-6 என கைப்பற்றினார். எனினும் அடுத்த செட்டை ஸ்ரீஜா அகுலா 11-8 என வென்றார். முடிவில் ஸ்ரீஜா அகுலா 2-1 (11-5, 6-11, 11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஒட்டுமொத்தமாக பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிக்கு எதிரான டையில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 9-6 என வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 5 டையில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி ஒட்டுமொத்தமாக 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று 41 புள்ளிகளுடன் 3-வது அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. ஏற்கெனவே நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ், தபாங் டெல்லி டிடிசி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.
பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணி 33 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. யுடிடி சீசன் 6-ல் இன்று (ஜூன் 12) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் யு மும்பா டிடி – தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதுகின்றன.