ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அரை சதம் விளாசல்
மான்செஸ்டர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷோயிப் பஷிருக்கு பதிலாக லியாம் டாவ்சன் இடம் பெற்றார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கருண் நாயர் நீக்கப்பட்டு சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டார்.
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ள நித்திஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டார். மேலும் ஆகாஷ் தீப்புக்கு மாற்றாக அன்ஷுல் கம்போஜ் இடம் பெற்றார். 24 வயதான அன்ஷுல் கம்போஜுக்கு இது அறிமுக போட்டியாக அமைந்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஒரு மணி நேரம் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தல் கொடுத்தனர்.
எனினும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பென் ஸ்டோக்ஸ் வீசிய 25-வது ஓவரின் 5-வது பந்தை ஜெய்ஸ்வால், தேர்டு மேன் திசையில் சிக்ஸர் அடித்தார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் சேர்த்திருந்தது. கே.எல்.ராகுல் 40, ஜெய்ஸ்வால் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.
பொறுமையாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 98 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் 3-வது சிலிப் திசையில் நின்ற ஸாக் கிராவ்லியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி 30 ஓவர்களில் 94 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சாய் சுதர்சன் களமிறங்கினார்.
ஜெய்ஸ்வால் 96 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் தனது 12-வது அரை சதத்தை கடந்தார். சிறப்பாக விளையாடி வந்த அவர், 107 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் லியாம் டாவ்சனின் சுழலில் சிலிப் திசையில் நின்ற ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் 23 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையில் இந்திய அணி 52 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 3 ரன்களும், சாய் சுதர்சன் 26 ரன்களும் சேர்த்திருந்தனர்.
தேநீர் இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். ரிஷப் பந்த் 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது வலது காலில் காயம் அடைந்தார். இதனால் அவர், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார்.
மிக பொறுமையாக விளையாடிய தனது முதல் அரை சதத்தை கடந்த அடித்த சாய் சுதர்சன் 151 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை விளாசிய போது லாங் லெக் திசையில் நின்ற ஸாக் கிராவ்லியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷர்துல் தாக்குர் களறமிங்கினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
ரவீந்திர ஜடேஜா 19, ஷர்துல் தாக்குர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ், லியாம் டாவ்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் உள்ள நிலையில் இந்திய அணி இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட உள்ளது.

