‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 சென்னை’ டேபிள் டென்னிஸ் தொடர்
சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை சாய், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், சேர்வோ, ஏசிஇ பிளெண்ட், எம்ஜிம் ஹெல்ட்கேர், ஸ்டேக் ஐகானிக், ஃபேன்கோடு, ஏசிடி ஃபைபர்நெட் ஆகியவற்றின் ஆதரவுடன் அல்டிமேட் டேபிள் டென்னிஸ், ஷரத் கமல் அகாடமி மற்றும் ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் AI இணைந்து நடத்துகின்றன.
இதில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யஷஸ்வினி கோர்படே ஜோடி போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் எட்வர்ட் அயோனெஸ்கு, பெர்னாடெட் ஸாக்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் ஹர்மீத் தேசாய், யஷஸ்வினி கோர்படே ஜோடி 0-3 (9-11, 2-11, 8-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் செக்குடியரசின் லுபோமிர் ஜான்காரிக் 3-2 (13-15, 11-7, 5-11, 11-7, 11-9) என்ற செட் கணக்கில் கொரியாவின் பார்க் காங்கியோனை தோற்கடித்தார்.
இறுதிப் போட்டியில் லுபோமிர் ஜான்காரிக், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் திபோ போரெட்டுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
திபோ போரெட் அரை இறுதியில் 3-0 (11-6, 11-2, 13-11) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஃபிளேவியன் காட்டனை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானின் சட்சுகி ஒடோ, மியூ ஹிரானோ பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

