மான்செஸ்டர்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 544 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்
இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 84 ரன்களும், பென் டக்கெட் 94 ரன்களும் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தனர். ஆலி போப் 20, ஜோ ரூட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஆலி போப் 128 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில், சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் 3 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார்.
இதன் பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இதனால் இங்கிலாந்து அணி 87-வது ஓவரில் 358 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 178 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 38-வது சதத்தை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள இலங்கையின் குமார் சங்கக்கராவின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்.
மேலும் இந்தியாவுக்கு எதிராக அவர், அடித்த 12-வது சதம் இதுவாகும். இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசியிருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் (11 சதங்கள்) சாதனையை முறியடித்தார். அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 248 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் 9, கிறிஸ்வோக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 135 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 544 ரன்கள் குவித்தது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று 4வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.