ஜெய்ப்பூர்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்தார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக நாங்கள் வைபவின் வலைப்பயிற்சியை கவனித்து வருகிறோம், அவர் என்ன திறன் கொண்டவர், என்ன ஷாட்களை விளையாட முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் ஐபிஎல் போட்டியில், திறமையான பந்துவீச்சுத் தாக்குதலுக்கு எதிராக வைபவ் செய்த சாதனை மிகப்பெரியது.
அவர் திறமைவாய்ந்த பேட்ஸ்மேன். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் நீண்ட காலம் விளையாட முடியும். அவரது திறமையை கவனித்து வருகிறோம். பந்தை சரியாக கவனித்து அதை மிகவும் வேகமாக விளாசுவது அவரது சிறப்பு. அவரது கிரிக்கெட் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது.
அதேநேரத்தில் 16 வயதில் அறிமுகமான இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் வைபவ் சூர்யவன்ஷியை ஒப்பிடுவது நியாயமற்றது. இவ்வளவு சீக்கிரம், சச்சினுடன் வைபவை நாம் ஒப்பிடக்கூடாது. அவர் இப்போதுதான் வளர்ந்து வரும் வீரர்.
இவ்வாறு ரத்தோர் கூறினார்.

