csk 29

பஞ்சாப் கிங்ஸுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?


சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 30) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்ட சிஎஸ்கே அணி சீசனை கவுரவமான இடத்துடன் நிறைவு செய்யய முயற்சிக்கக்கூடும்.

5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 4 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்துள்ளது. ருதுராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் சிஎஸ்கே அணி தத்தளித்து வருகிறது. பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முதல் 6 ஓவர்களிலேயே சிஎஸ்கே அணி ஆட்டத்தை கோட்டை விட்டு வருகிறது.

எனினும் கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் இருந்தது. டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ரன்களும் விளாசி கவனம் ஈர்த்திருந்தனர். இன்றைய ஆட்டத்தில் டெவால்ட் பிரேவிஸ் 3-வது வீரராக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆட்டத்தின் முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் சிஎஸ்கே அணி கூடுதல் துணிச்சலுடன் விளையாடுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டிருந்தது.


நடப்பு சீசனில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த 8-ம் தேதி முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து இருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top