magnes carlsen

கோவாவில் உலகக் கோப்பை செஸ் தொடர்

கோவா

செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.

இந்தத் தொடரில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ம் ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதி பெறுவார்.

கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளர், தற்போது உலக சாம்பியனாக உள்ள இந்தியாவின் டி.குகேஷுடன் பலப்பரீட்சை நடத்துவார். செஸ் உலகக் கோப்பை தொடரை 23 வருடங்களுக்கு பிறகு இந்தியா நடத்த உள்ளது. கடைசியாக 2002-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொடரில் வீரர்கள் நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள்.

இதனால் ஒவ்வொரு சுற்றிலும் தோல்வியடையும் வீரர் வெளியேற்றப்படுவார். ஒவ்வொரு சுற்றும் மூன்று நாட்கள் நீடிக்கும். முதல் இரண்டு நாட்களில் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெறும். இவை டிராவில் முடிவடைந்தால் மூன்றாவது நாளில் டை-பிரேக்கர் நடைபெறும். செஸ் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 206 வீரர்களில் முதல் 50 இடங்களில் உள்ள வீரர்களுக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்படும்.

இதனால் இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்பார்கள். 51 முதல் 206-வது இடங்களில் உள்ள வீரர்கள் முதல் சுற்றில் விளையாடுவார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியனும் உலகின் முதல் நிலை வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளனர். இந்தத் தொடரின் பரிசுத் தொகை ரூ.17.53 கோடியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top