ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஆர்யன்ஷ் சர்மா 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்திலும், கேப்டன் முகமது வசீம் 10 ரன்களில் முஜீப் உர் ரஹ்மான் பந்திலும் நடையை கட்டினர்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த அலிஷான் ஷராஃபு, சோஹைப் கான் ஜோடி சீரராக ரன்கள் சேர்த்தது. 84 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முஜீப் உர் ரஹ்மான் பிரித்தார்.
அலிஷான் ஷராஃபு 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஐக்கிய அரபு அமீரகம் 11.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் பின்னர் அந்த அணி ஆட்டம் கண்டது. சையது ஹைதர் 13, ஹர்ஷித் கவுசிக் 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் வெளியேறினர். முகமது அர்ஃபான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரஷித் கான் பந்தில் ‘ஹிட்விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார்.
தனது 2-வது அரை சதத்தை கடந்த சோஹைப் கான் 48 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஹைதர் அலி 13, ஜூனைத் சித்திக் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். முஜீப் உர் ரஹ்மான் 2, ரஷித் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த செய்த ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்ராகிம்ஸத்ரன் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், டார்விஷ் ரசூலி 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி கண்டிருந்தது.
தற்போதைய வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வரும் 19-ம் தேதி கனடாவுடன் மோதுகிறது.

