MI

பிரச்சினை தீர்ந்தாச்சு.. வெளுத்துக்கட்ட மும்பை இந்தியன்ஸ் ரெடி💯

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கடந்த 4 சீசன்களாக தடுமாறி வருகிறது. கடைசியாக2020-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி அதன் பின்னர் 2021-ல் 5-வது இடத்தையும், 2022-ல் 10-வது இடத்தையும், 2023-ல் 4-வது இடத்தையும், 2024-ல் கடைசி இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தது.

கடந்த ஆண்டு திடீரென ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது அணிக்குள் பல்வேறு குழப்பங்களை விளைவித்தது. இந்த மாற்றத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது களத்திலும் எதிரொலித்தது. சீசன் முழுவதும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து மைதானங்களிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ரோஹித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்தனர். இதனால் ஹர்திக் பாண்டியா மீதான ரசிகர்களின் பார்வை மாறத் தொடங்கியுள்ளது.

மேலும் ரோஹித் சர்மாவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைக் குழு இணக்கமான முறையில் உள்ளது. எனவே இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் வலுவுடன் செயல்பட்டு எதிரணிகளுக்கு சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MI 1

நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் அணிக்கு திரும்பி இருப்பது வேகப்பந்து வீச்சுக்கு வலுசேர்க்கக்கூடும். மேலும் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தீபக் சாஹரும் புதிதாக இணைந்துள்ளார்.

தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கார்பின் போஸ், இங்கிலாந்தின் ரீஸ் டாப்லே ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிவர்கள்.

சுழலில் மிட்செல் சாண்ட்னர், கரண் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் உறுதுணையாக இருக்கக்கூடும். முதுகு வலி காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்பிரீத் பும்ரா முதற்கட்ட ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம்.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் வெளிநாட்டு வீரர்களான வில் ஜேக்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், ரியான் ரிக்கெல்டன் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். இளம் வீரர்களான ராபின் மின்ஸ், விக்னேஷ் பதூர், ராஜ் பாவா ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top