பாரிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனானன இகா ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 22-வது வெற்றியை பதிவு செய்தார்.
கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான இன்று (மே 26) ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 310-ம் நிலை வீரரான இத்தாலியை சேர்ந்த கியுலியோ செப்பியேரியை எதிர்த்து விளையாடினார்.
இதில் அல்கராஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானுடன் மோதுகிறார் அல்கராஸ்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும் 5-ம் நிலை வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 42-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் ரெபேக்கா ஸ்ராம்கோவாவை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார்.
இகா ஸ்வியாடெக்குக்கு பிரெஞ்சு ஓபனில் இது தொடர்ச்சியான 22-வது வெற்றியாக அமைந்தது. 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக், கிரேட் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை எதிர்கொள்கிறார்.