தோல்விகளால் சிஎஸ்கேவுக்கு பீதியா?

பெங்களூரு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 3) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் 2 வெற்றி, 8 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி இன்றைய போட்டி உட்பட எஞ்சியுள்ள ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு கவுரவமான முறையில் தொடரை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தக்கூடும்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸி கூறும்போது, “இந்த ஆண்டு சரியாக நடக்கவில்லை என்பதற்காக நாங்கள் நிச்சயமாக பீதியடைந்து எல்லாவற்றையும் தூக்கி எறியப் போவதில்லை, நாங்கள் சில பகுதிகளில் நேர்த்தியாக செயல்பட வேண்டும்.

நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும், நாங்கள் பல ஆட்டங்களை வெல்லவில்லை. ஆனால் உண்மையில் நாங்கள் வெகு தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை. பேட்டிங் வரிசையில் சில மேட்ச் வின்னிங் வீரர்கள் உள்ளனர். தொடரில் எந்த அணியுடனும் நிச்சயம் எங்களால் போட்டியிட முடியும்.

டெவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைப்பது சிறப்பான விஷயம். அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியில் தங்கள் இடத்தை உயர்த்துவார்கள் என்று நம்புகிறோம். ஒரு சில வெற்றிகள் மற்றும் சில வீரர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால், அது சீசனின் முடிவில் அருமையாக இருக்கும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top