ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட்0, அபிஷேக் சர்மா 8, இஷான் கிஷன் 1, நித்திஷ் குமார் ரெட்டி 2 ரன்களில் நடையை கட்டினர்.
35 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் அபினவ் மனோகர் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் விளாசியதன் காரணமாகவே ஹைதராபாத் அணியால் கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது.
மும்பை அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான ரோஹித் சர்மா 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார். ரியான் ரிக்கெல்டல் 11, வில் ஜேக்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி +0.673 நிகர ரன்ரேட்டுன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் கெய்ரன் பொலார்டை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா ஐபிஎல் தொடர்களில் 298 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இதில் 244 சிக்ஸர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது வந்தவை, 51 சிக்ஸர்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது வந்தவை. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது 16 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்
260* (225 இன்னிங்ஸ்) – ரோஹித் சர்மா
258 (193 இன்னிங்ஸ்) – கெய்ரன் பொல்லார்ட்
127 (104 இன்னிங்ஸ்) – சூர்யகுமார் யாதவ்
115 (103 இன்னிங்ஸ்) – ஹர்திக் பாண்டியா
106 (84 இன்னிங்ஸ்) – இஷான் கிஷன்