ஹாட்ரிக் வெற்றி ஸ்பெஷல்.. ரோஹித் சர்மா ஹாப்பி !

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், ஷிவம் துபே 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன 50 ரன்களும் சேர்த்தனர்.

அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். தொடக்க வீரர்களான ஷெய்க் ரஷித் 19, ரச்சின் ரவீந்திரா 5, தோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் சாஹர், அஸ்வனி குமார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 76 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வானார்.

அப்போது அவர் கூறும்போது, “எனக்கு ஆதரவு கொடுத்த சில சென்னை ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்பக் கூடியவர்கள். அதுவே வான்கடே மைதானத்தில் ஸ்பெஷல். கிரிக்கெட்டை அவர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகின்றனர். நீண்ட நாட்களாக செயல்திறனை வெளிப்படுத்தாமல் இருக்கும் போது உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகம் வரும்.

என்னைப் பொறுத்த வரை எளிமையான விஷயங்களை தெளிவான மனதுடன் செய்வது முக்கியம். எங்களுடைய திட்டத்துக்கு தகுந்தார் போல் எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம். நான் இம்பேக்ட் வீரராக களமிறங்குவது எந்தவித பிரச்சினையும் இல்லை.

சரியான நேரத்தில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றுள்ளது சிறப்பான விஷயம். வான்கடே மைதானத்தில் இளம் வயதில் எனக்கு உள்ளே வர அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் வளர்ந்து அனைத்து கிரிக்கெட்டையும் இங்கே விளையாடி தற்போது இங்குள்ள ஸ்டேண்ட்டுக்கு எனது பெயர் வைக்கப்பட்டுள்ளதை பெரிய கவுரவமாக கருதுகிறேன்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top