சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 5) பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், புத்துயிர் பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே இம்முறை தொடக்கத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் பெங்களூரு, ராஜஸ்தானிடம் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. நடப்பு சீசனில் சிஎஸ்கேவின் பேட்டிங் தொடக்கத்திலும் சரி, இறுதியிலும் சரி உத்வேகம் இல்லாமல் உள்ளது.
கடந்த சீசன்களில் ஆக்ரோஷம் காட்டிய ஷிவம் துபே பார்மின்றி தவித்து வருகிறார். ருதுராஜ் கெய்க்வாட் 3-வது வீரராக களமிறங்குவதும் பாதகமான நிலையை உருவாக்கி உள்ளது. தொடக்க வீரரான ராகுல் திரிபாதி வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறுவது வாடிக்கையாக உள்ளது. மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா மந்தமாக விளையாடுவதும் அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
நடுவரிசையில் தீபக் ஹூடோ, சாம் கரண் ஆகியோருக்கு பதிலாக கடந்த ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன் ஆகியோரிடம் இருந்தும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இதேபோன்று பின்வரிசையில் முக்கியமான கட்டங்களில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் ரவீந்திர ஜடேஜா, தோனி ஆகியோரிடம் இருந்து நடப்பு சீசனில் ரன் வறட்சி நிலவுவது அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையும் பலவீனப்படுத்தி உள்ளது.
இதேபோன்று பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் தேக்கம் அடைகின்றனர். ஜடேஜா, அஸ்வின், பதிரனா ஆகியோரிடம் இருந்து திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. இதில் அஸ்வின் பவர்பிளேவில் அதிக ரன்களை வாரி வழங்குவது பலவீனமாக உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென்றால் அணிச் சேர்க்கையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அநேமாக டாப் ஆர்டரில் டேவன் கான்வே ரிட்டர்ன் ஆகக்கூடும்.