pakistan team

கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் வேட்டுவைத்தது பாக். வாரியம்

கராச்சி: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை வெகுவாக குறைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

தேசிய டி 20 சாம்பியன்ஷிப் தொடர் வரும் 14-ம் தேதி கராச்சியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஒரு போட்டிக்கு வாங்கும் சம்பளத்தை ஒரு லட்சத்தில் இருந்து 10 ஆயிரமாக குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதேவேளையில் மாற்று வீரர்களுக்கு 5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பள குறைப்பு வீரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு தலைவராக அப்துல்லா குர்ரம் நியாசி, கடந்த சில மாதங்களாக உள்நாட்டு வீரர்களுக்கான வசதிகளைக் குறைத்து வருகிறார்.

முதலில் ஐந்து நட்சத்திர மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிடம் வழங்கப்பட்ட வீரர்களுக்கு இப்போது மலிவான தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன. வீரர்களின் போட்டி ஊதியத்தை தவிர விமானப் பயணமும்  குறைக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க கடந்த சீசனில் வீரர்கள் மற்றும் அம்பயர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லையாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் குறைக்கப்படும் நிலையில், இந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரிகள் மாத சம்பளத்தை மில்லியன் கணக்கில் பெறுகிறார்கள் என்பதுதான் முரண்நகை. மேலும் அதே நேரத்தில் அணி தேர்வாளர்களுக்கும், சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் கோப்பைக்காக நியமிக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கும் கூட அதிக மாத சம்பளத்தை வழங்குகிறது.

வழிகாட்டிகளான மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ், சோயிப் மாலிக், சர்பராஸ் அகமது மற்றும் சக்லைன் முஷ்டாக் ஆகியோருக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தில் மாதத்திற்கு சுமார் 5 மில்லியன் சம்பளம் வழங்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபிக்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியம், கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியம் மற்றும் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றை மேம்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாயரியம் சமீபத்தல் சுமார் 1.8 பில்லியனை செலவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top