புதுடெல்லி: உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் யாரும் டாப் 10-ல் இடம் பெறவில்லை. நட்சத்திர வீரரான லக்சயா சென் மற்றும் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சரிவை சந்தித்துள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீரரான லக்சயா சென் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேவேளையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 5 இடங்களை இழந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு சாம்பியன்களான இந்த ஜோடி 2021-ம் ஆண்டு நவம்பருக்கு பின்னர் தற்போதுதான் முதல் 10 இடங்களுக்கு வெளியே உள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து ஒரு இடத்தை இழந்து 16-வது இடத்தில் உள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 9-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவு தரவரிசையில் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 19-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.